வேளாண்துறையில் முன்னேற்றம் : சுதந்திர தின வைர விழாவில் பிரதமர் வலியுறுத்தல்

Webdunia

புதன், 15 ஆகஸ்ட் 2007 (11:58 IST)
செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின வைர விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மன்மோகன் சிங் தனது உரையில், வேளாண்துறையில் முன்னேற்றம் தேவை என்பதை வலியுறுத்திப் பேசினார்.

டெல்லி, செங்கோட்டையில் இன்று காலை நடந்த 60-வது சுதந்திர தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிரதமர், தேசியக் கொடியை ஏற்றினார்.

இதைத்தொடர்ந்து உரையாற்றிய அவர், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது என்றும், மத்திய அரசின் 'பாரத் நிர்மான்' திட்டத்தால் கிராமப்புறங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் கூறினார்.

நமது நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பே விவசாயிகள்தான் என்ற அவர், வேளாண் துறைக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும், தொழில்மயமாக்கலின் வாயிலாக வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அடிப்படைக் கல்வியோடு, உயர் கல்வியிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்த பிரதமர், புதிதாக 8 ஐஐடி கல்வி நிறுவனங்களும், 7 ஐஐஎம் கல்வி நிறுவனங்களும் நிறுவப்படவுள்ளதாகவும், ஏழை மக்களுக்காக புதிய காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

மத்திய அமைச்சகர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியையொட்டி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்