தாவூத் கைது உண்மையா? இந்தியா கேள்வி!

Webdunia

புதன், 8 ஆகஸ்ட் 2007 (21:01 IST)
1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாதச் செயல்களில் தொடர்புடைய சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமை கைது செய்துள்ளதாக வந்துள்ள தகவல்கள் குறித்து உண்மையை தெரியபடுத்துமாறு பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பிற்கு மத்திய புலனாய்வுக் கழகம் கடிதம் அனுப்பியுள்ளது!

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தாவூத் இப்ராஹிம் கைது செய்யப்பட்டதாகவும், அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எஃப்.ஐ.ஏ.யின் விசாரணையில் உள்ளதாகவும் செய்திகள் வந்தன.

இந்த செய்தி உண்மைதானா என்பதனை உறுதிப்படுத்துமாறு எஃப்.ஐ.ஏ.விடம் ம.பு.க. கேட்டுள்ளது.

தாவூத் இப்ராஹிம் தேடப்படும்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சர்வதேச காவல் துறையால் (இன்டர்போல்) தேடப்பட்டு வரும் நிலையில், அவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் ம.பு.க.வின் கோரிக்கைக்கு இணங்க உரிய தகவல்களை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் எஃப்.ஐ.ஏ. உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி, பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டுவரும் தாவூத் இப்ராஹிமை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்துள்ளதால் அவனுடைய கைது பற்றிய விவரங்களை அமெரிக்காவிடமும் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் எஃப்.ஐ.ஏ. உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்