ஒரிசா, கோவாவில் பயங்கர வெள்ளம்

Webdunia

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2007 (15:53 IST)
பீகார், உத்திரபிரதேசத்தை தொடர்ந்து ஒரிசா, கோவா மாநிலங்களும் பலத்த மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வட மாநிலங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது. பீகாரில் வெள்ளத்தால் பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

பீகார் மாநிலத்தில் இதுவரை மழை வெள்ளத்திற்கு 100 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மீட்புப் பணிகளில் ராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர். உத்திரபிரதேசத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அங்குள்ள எல்லா ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதற்கிடையில், வங்ககடலில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஒரிசா மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தொடர் மழைக்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர்.

இதேபோல், கோவா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. பனாஜி, மர்ம கோவா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பீகார் மற்றும் அசாமில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவும், மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீலும் இன்று பார்வையிடுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்