அணு ஆயுதக் குறைப்புடன் என்.பி.டி.யை இணைக்க வேண்டும் : பிரணாப்!

Webdunia

வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (19:47 IST)
அணு ஆயுதப் பரவலை தடுக்க வேண்டுமெனில் அதனை அணு ஆயுதக் குறைப்புடன் தொடர்புபடுத்தினால் மட்டுமே பயன் கிட்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது!

ஃபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வரும் 14வது ஏசியான் மண்டல மாநாட்டில் உரையாற்றிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையை அணு ஆயுதக் குறைப்புடன் இணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

"அணு ஆயுதக் குவிப்பை தடுக்கும் இலக்கை உறுதியாகக் கடைபிடிப்பதில் இந்தியா நீண்ட காலமாக செயல்படுத்தி வருகிறது. ஆயினும் அணு ஆயுதக் குறைப்பு, அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையுடன் இணைக்காவிட்டால் அது பயனளிக்காது" என்று பிரணாப் முகர்ஜி பேசினார்.

27 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஆசிய மண்டல அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும், பயங்கரவாதத்திற்கும், பல நாடுகளில் அமைப்பு ரீதியாக இயங்கும் குற்றச் செயல்களைத் தடுக்கவும், கடல் வணிகப் பாதுகாப்பை உறுதி செய்யவும், அமைதி காத்தலிலும், எரிசக்தி தன்னிறைவிலும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று கூறிய பிரணாப், இந்த இலக்குகளில் ஏசியான் மண்டல அமைப்பின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது என்று கூறினார். (பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்