கார்கில் போர் வெற்றி தினம்!

Webdunia

வியாழன், 26 ஜூலை 2007 (20:43 IST)
ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் மலைச் சிகரத்தை கைப்பற்றிய பாகிஸ்தான் ராணுவத்தினரை விரட்டி இந்திய ராணுவத்தினர் வெற்றி கண்ட 8வது ஆண்டையொட்டி, அப்போரில் மடிந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!

டிராஸ் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போர் நினைவு சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான இந்திய வீரர்கள் அஞ்சலி செலுத்த இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி ஓ.பி. நாந்த்ராஜோக் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

இந்திய ராணுவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க போராக கார்கில் போர் இடம் பெற்றுவிட்டது.

கார்கில் சிகரத்தை மீட்க நடந்த ஆப்ரேஷன் விஜய் என்ற போரில் ஈடுபட்ட 8வது மலைப் படையினர் செய்த தியாகம் நினைவு கூறப்பட்டது. இந்தியத் தரைப் படையின் 3வது பிரிவைச் சேர்ந்த வீரர்களும் இப்போரில் ஈடுபட்டனர்.

webdunia photoFILE
கார்கில் போரில் பாகிஸ்தானியர்கள் மலை உச்சியில் நிலைபெற்று அங்கிருந்து தொடர்ந்து நடத்திய தாக்குதலைப் பொருட்படுத்தாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் சரவணன் தனது படையினருடன் முன்னேறி எதிர்த் தாக்குதல் நடத்தினார். அந்தப் போரில் களப்பலியான முதல் அதிகாரி சரவணன்தான். குண்டடி பட்டு உயிர் நீத்த அவரது உடலை போர் முடிந்த பிறகுதான் மீட்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய உடல் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.