இட ஒதுக்கீடு வழக்கு: ஆக.7 முதல் அரசமைப்பு அமர்வு விசாரிக்கும்

Webdunia

வியாழன், 26 ஜூலை 2007 (12:41 IST)
ஐஐடி, ஐஐஎம், மருத்துவம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் அரசமைப்பு ரீதியாக சரியானதுதானா என்பதனை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

உயர்கல்வி நிலையங்களில் இந்த கல்வி ஆண்டிலேயே இதர பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து மாணாக்கர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு கடந்த மார்ச் 29ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றக் குழு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக் கோரி மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு எதிரான வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு (கான்ஸ்டிட்யூஷனல் பெஞ்ச்) விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தது.

மத்திய அரசின் இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான நீதிமன்றக் குழு, இட ஒதுக்கீடு தொடர்பான இவ்வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி முதல் விசாரிக்கத் துவங்கும் என்று உத்தரவு பிறப்பித்தது.

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு இடைக்காலத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட மார்ச் 29ஆம் தேதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்