பிரதீபா பாட்டீல் இன்று பதவியேற்பு

Webdunia

புதன், 25 ஜூலை 2007 (10:26 IST)
குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் இன்று தனது பதவியை ஏற்றுக் கொள்கிறார்.

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அப்துல்கலாம், துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பைரோன்சிங் செகாவத், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி மற்றும் அனைத்து மத்திய அமைச்சர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீலை பா.ஜனதா கட்சி எதிர்த்தாலும், நாட்டின் உயர்ந்த பதவியை வகிக்க இருக்கும் அவரது பதவி ஏற்பு விழாவில் அந்தப் பதவியின் கெளரவத்தை கருதி பாஜக பங்கேற்கும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆகவே பா.ஜக தலைவர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி, மாயாவதி, ஷீலா தீட்சித், புபீந்தர் சிங் ஹூடா உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்களும், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள், அரசு உயர் அதிகாரிகளும் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.

பிரதீபா பட்டீல் பதவி ஏற்றதும் அப்துல் கலாம் வழியனுப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் நேராக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்