ஹமீத் அன்சாரி, நஜ்மா ஹெப்துல்லா வேட்பு மனு தாக்கல் செய்தனர்!

Webdunia

திங்கள், 23 ஜூலை 2007 (13:48 IST)
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு - இடதுசாரி கூட்டணிகளின் வேட்பாளராக போட்டியிடும் மொஹம்மது ஹமீத் அன்சாரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லாவும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்!

ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நஜ்மா ஹெப்துல்லாவும், 3ம் அணியின் சார்பாக சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூதும் போட்டியிடுகின்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசத் தலைவர் து. ராஜா, மத்திய அமைச்சர்கள் சரத் பவார், லாலு பிரசாத், ராம் விலாஸ் பாஸ்வான், டி.ஆ. பாலு ஆகியோருடன் சென்ற அன்சாரி, மாநிலங்களவை பொதுச் செயலரும், தேர்தல் அதிகாரியுமான யோகேந்திர நாராயணனிடம் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹமீத் அன்சாரி, தனது வாழ்க்கையில் இதுவொரு சிறப்பான தருணம் என்று கூறினார்.

குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், மாநிலங்களவை எவ்வாறு நடத்துவீர்கள் என்று கேட்டதற்கு, ஒவ்வொரு அமைப்பும் விதிமுறைகளின்படியே நடத்தப்படுகிறது. மாநிலங்களவை அதன் நடைமுறைக்கான விதிமுறைகளையும், முறைகளையும் கொண்டுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்களுடனும், தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னணித் தலைவர்களுடன் வந்த நஜ்மா ஹெப்துல்லா தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். (பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்