எல்லைக்கோடு அமைதிக் கோடாக மாற்றப்பட வேண்டும் - பிரதமர்!

Webdunia

ஞாயிறு, 15 ஜூலை 2007 (17:19 IST)
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதம் இல்லாத மாநிலமாகவும், இந்தியா - பாகிஸ்தான் இடையே உறவுகளை மேம்படுத்தும் சின்னமாகவும் அது விளங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ஒரு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஜம்மு பல்கலைக்கழகத்தில் தனக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பிளப்பது அல்லது பிரிப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று கூறிய மன்மோகன் சிங், தான் ஏற்கனவே கூறியது போல, எல்லைக்கோடுகள் மாற்றப்படாது, ஆனால் அவைகள் அர்த்தமற்றதாக்கப்பட வேண்டும் என்றும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அமைதிக்கான கோடாக மாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.

தற்பொழுது பாகிஸ்தானுடன் நடந்து வரும் பேச்சுவாத்தையானது, கடந்த 60 ஆண்டுகளாக ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்கு தீர்வு காணும் விதமாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் விதமாகவும் இருக்கும் என்று மன்மோகன் சிங் கூறினார்.

உண்மையான அரசியல் தலைமையிலான ஜனநாயகம் என்பது வாக்குகளிப்பு மூலம் மட்டுமே கிடைக்கும் என்றும், துப்பாக்கிகள் மூலம் பெறமுடியாது என்றும் கூறிய மன்மோகன் சிங், அமைதியும், அன்பும் நிறைந்த இந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலிற்கு தீர்வு காண்போம் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்