பயங்கரவாதிகளுக்கு உதவியதாக ஹனீஃப் மீது ஆஸி. காவல்துறை குற்றச்சாற்று!

Webdunia

சனி, 14 ஜூலை 2007 (12:07 IST)
இங்கிலாந்தில் நடந்த விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடையவராக கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃப் மீது பயங்கரவாத அமைப்பிற்கு உதவியதாக ஆஸ்ட்ரேலிய காவல்துறை குற்றம் சாற்றியுள்ளது!

ஆஸ்ட்ரேலியாவில் பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட ஹனீஃப், இங்கிலாந்து கார் குண்டு தாக்குதலில் திட்டமிட்டு நிறைவேற்றியவர்களுக்கு தனது செல்பேசியின் சிம்கார்டை அளித்து உதவியுள்ளார் என்று ஆஸ்ட்ரேலிய காவல்துறை கூறியுள்ளது.

ஆனால், அவர் தனது செல்பேசியின் சிம்கார்டை அளித்த நடவடிக்கை தன்னிச்சையானது தானே தவிர எந்தவித உள்நோக்கமும் கொண்டதாக இல்லை என்றும் ஆஸ்ட்ரேலிய காவல் துறையின் ஆணையர் மிக் கீட்லி கூறியுள்ளதாக பெல்போர்ன் செய்திகள் கூறுகின்றன.

"யு.கே. தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலிற்கு தனது செல்பேசியின் சிம்கார்டை ஹனீஃப் அளித்துள்ளாரே தவிர, மற்ற எந்த வகையிலும் அவர் அச்சதித் திட்டத்துடன் தொடர்புடையவராகத் தெரியவில்லை" என்று கீட்லி கூறியதாக செய்திகள் கூறுகின்றன.

பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஹனீஃப், தன்னை பிணையில் விடுவிக்குமாறு நீதிபதியிடம் முறையிட்டார். (பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்