புதிய ஏவுகணைத் திட்டம் : ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

Webdunia

வெள்ளி, 13 ஜூலை 2007 (20:58 IST)
நமது நாட்டின் விமானப் படையின் வல்லமையை பலப்படுத்த தரையில் இருந்து விண் இலக்குகளைத் தாக்கவல்ல புதிய தலைமுறை இடைத்தூர ஏவுகணை உருவாக்கும் ரூ.10,000 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது!

தலைநகர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த இடைத்தூர ஏவுகணைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தரையில் இருந்து 70 கி.மீ. வரையிலான விமானம் உள்ளிட்ட விண் இலக்குகளைத் தாக்கவல்ல ஏவுகணையை உருவாக்கும் திட்டத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் உருவாக்கியுள்ளது.

தற்பொழுது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பெக்கோரா ஏவுகணைகளை இந்திய விமானப்படை பயன்படுத்தி வருகிறது. அதற்கு மாற்றாகவே இந்த புதிய தலைமுறை இடைத்தூர ஏவுகணையைத் தயாரிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது.

இந்த ஏவுகணையை இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகமும், இந்திய விமானப்படையும் உருவாக்கவுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்