கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் நீரின் ஒரு பகுதியை காவிரியில் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில துணை முதலமைச்சர் எடியூரப்பாவை விவசாயிகள் முற்றுகையிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்!
குடகு உள்ளிட்ட காவிரியின் உற்பத்தித் தளங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகளுக்கு நீர் வரத்து பெருமளவிற்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகப்படியாக வரும் நீரின் ஒரு பகுதி காவிரியில் திறந்துவிடப்பட்டு மேட்டூர் அணைக்கு வந்துக் கொண்டிருக்கிறது.
கர்நாடக அணைகள் முழுமையாக நிரம்புவதற்கு முன்னரே அணைக்கு வரும் தண்ணீரின் ஒரு பகுதியை திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி பகுதி மேம்பாட்டு ஆணையம் என்றழைக்கப்படும் கர்நாடக அலுவலகம் முன்பு மண்டியா மாவட்ட விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மண்டியா தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சோமசேகர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு அரசு உத்தரவிட்டதால்தான் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
இந்த நிலையில் மைசூர் வந்த கர்நாடக துணை முதலமைச்சர் எடியூரப்பாவை மண்டியா மாவட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர். சிறிது நேரம் இந்த முற்றுகை நீடித்தது. காவிரி பகுதி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் அளித்த உறுதிக்குப் பிறகு அவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, கர்நாடக அணைகளில் நீர்வரத்தின் காரணமாக அணையின் நீர்மட்டம் அபாய அளவை எட்டியதால்தான் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதாகக் கூறினார். (யு.என்.ஐ.)