அணி சேரா நாடுகள் : ரைஸ் கருத்திற்கு இந்தியா மறுப்பு!

Webdunia

வெள்ளி, 29 ஜூன் 2007 (20:03 IST)
சர்வதேச அமைப்புகளை ஜனநாயகமயப்படுத்த அணி சேரா நாடுகள் அமைப்பு அவசியமானது என்றும், அது துவக்கப்பட்டதற்கான நோக்கத்தில் இந்தியா இன்றும் உறுதியுடன் உள்ளது என்றும் அயலுறவு அமைச்சகம் கூறியுள்ளது!

வாஷிங்டனில் இந்திய-அமெரிக்க வர்த்தகப் பேரவை நடத்திய விருதளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ், அணி சேரா நாடுகள் இயக்கம் அர்த்தமற்றதாகிவிட்டது என்று கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அயலுறவு அமைச்சகப் பேச்சாளர், தென் கண்ட நாடுகளிடையே ஒத்துழைப்பையும், சர்வதேச அமைப்பை ஜனநாயகமயப்படுத்தவும் தொடர்ந்து அணி சேரா நாடுகள் இயக்கம் பாடுபட்டு வருகிறது என்று கூறினார்.

காலனி ஆதிக்கம் மட்டுமின்றி, தென் ஆப்ரிக்காவில் இன ஒடுக்கல் கொள்கையையும் ஒழித்ததில் அணி சேரா நாடுகள் இயக்கத்திற்கு பெரும் பங்கு உண்டு என்று கூறிய அமைச்சகப் பேச்சாளர், எந்த கொள்கைகளுடன் அணி சேரா நாடுகள் இயக்கம் உருவாக்கப்பட்டதோ அந்த கொள்கைகளில் இன்னமும் இந்தியா உறுதியுடன் உள்ளது என்று கூறியுள்ளார்.

இடதுசாரிகள் கண்டனம்!

அணி சேரா நாடுகள் இயக்கம் அர்த்தமற்றதாகிவிட்டது என்று ரைஸ் பேசியுள்ளது, அந்த இயக்கத்தை விட்டுவிட்டு வெளியேறி அமெரிக்க தலைமையிலான ஜனநாயக நாடுகளின் கூட்டணியில் இந்தியா இணைய வேண்டும் என்பதற்காகவே என்று இடதுசாரிகள் குற்றம் சாற்றியுள்ளனர்.

அமெரிக்காவுடன் ராணுவ ரீதியிலான கூட்டணியில் இணைந்தால் மட்டுமே இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு உறுதியாகும் என்று இப்படிப்பட்ட கருத்தின் மூலம் அமெரிக்கா சொல்லாமல் சொல்லியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்தக் கருத்தை கண்டிக்கும்வண்ணம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கோரியுள்ள மார்க்சிஸ்ட் கட்சி அறிக்கை, அயலுறவு கொள்கை குறித்து இந்தியாவிற்கு எவரும் பாடம் நடத்தத் தேவையில்லை என்று கூறியுள்ளது. (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்