இந்திய - அமெரிக்க இடையே கையெழுத்தான அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தும் 123 ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்க்ளிடம் பேசிய பிரதமர், இந்தியா - அமெரிக்க இடையேயான அணு சக்தி ஒத்துழைபை நடைமுறைப்படுத்தும் 123 ஒப்பந்தத்தில் ஒன்றிரண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிருப்பதாகவும், விரைவில் அதற்கு முடிவு எட்டப்படும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
123 தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும் போது, இது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
அணுசக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஒவ்வொரு கட்ட நடவடிக்கையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன் சிங், இதற்கு முன்பு இது போல் நடந்ததில்லை என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அயலுறவுச் செயலர் கோண்டலிசா ரைஸ், இந்தாண்டு இறுதிக்குள் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு நடைமுறைக்கு கொண்டுவரும் 123 ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும் என்று கூறியுள்ளர்.