ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் அடுத்தமாதம் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் சார்பில் ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, பிரதீபா பாட்டீல் தனது ஆளுநர் பதவியை இன்று ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரதீபா பாட்டீல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்ததாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை ராஷ்ட்ரபதி பவனில் இன்று சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததாகவும், வருகிற 23 ஆம் தேதி அவர் வேட்பு மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.