ஜூன் 30ஆம் தேதி மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா லக்னோவில் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.
இதையடுத்து மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச ரயில்வே காவல்துறை இது குறித்து கூறுகையில், புலாந்த்ஷஹர் ரயில் நிலை அதிகாரியின் பெயருக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ரயில் நிலையங்கள்தான் லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய இலக்கு. லக்னோ, அலிகார், புலந்தர்ஷஹர், மீரட், மொராதாபாத் மற்றும் சில ரயில நிலையங்களிலும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2001 டிசம்பர் 13 நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றவாளியான அப்சால் குருவை காப்பாற்றவே இந்த போராட்டம் என்றும், அப்சால் குருவை காப்பாற்றுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தை அடுத்து, முக்கிய ரயில் நிலையங்களில் பாதகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்புப் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.
ஏற்கனவே மகாராஷ்டிராவில் உள்ள சித்தி விநாயகர் கோயில், ஷீர்டி கோவில்களுக்கு வந்த மிரட்டல்களைத் தொடர்ந்து அங்கு தேங்காய் உடைப்பது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.