3 வது அணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என தெலுங்கு தேச கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்தில் இன்று தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இந்நிலையில், புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஐக்கிய முற்போக்கு, இடது சாரிகள் கூட்டணி சார்பில் ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், 3 வது அணியின் சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும் என தெலுங்கு தேச கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையில் நாளை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இல்லத்தில் 3 வது அணித் தலைவர்கள் பங்கேற்க உள்ள கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
3 வது அணி சார்பில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பர்ரூக் அப்துல்லா அல்லது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாத்திமா பீபி வேட்பாளாராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.