ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பட்டீல் குடியரசுத் தலைவர் வேட்பாளர்!

Webdunia

வியாழன், 14 ஜூன் 2007 (18:45 IST)
ராஜஸ்தான் மாநில ஆளுநரும், மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்தவரும், வழக்கறிஞரும், சமூக சேவகருமான பிரதீபா பட்டீலை ஐக்கிய முற்போக்கு - இடதுசாரி கூட்டணிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக சோனியா காந்தி அறிவித்துள்ளார்!

தலைநகர் டெல்லியில் சற்றுமுன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, பிரதீபா பட்டீலை ஐ.மு. - இடதுசாரி கூட்டணிகளின் பொது வேட்பாளராக அறிவித்தார்.

ஒரு பெண் இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ள சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த வேளை வந்துள்ளது என்று சோனியா காந்தி கூறினார்.

இன்று மதியம் 2 மணிக்கு பிரதீபா பட்டீலின் பெயரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழக முதலமைச்சர் கருணாநிதி்க்கு அனுப்பி வைத்ததாகவும், இடதுசாரி தலைவர்களுடன் அவரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து கலந்தாலோசித்து அவர்களின் ஒப்புதலைப் பெற்ற கருணாநிதி, அதனை சோனியா காந்திக்கு தெரிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

72 வயதான பிரதீபா பட்டீல், தற்பொழுது ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்து வருகிறார். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இவர், 5 முறை அம்மாநில சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பிரதீபா பட்டீல், மாநிலங்களவைத் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் இவருடைய பெயரை பரிந்துரை செய்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.மு. - இடதுசாரி கூட்டணிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பட்டீல், மொத்தமுள்ள 11 லட்சம் வாக்குகளில் 5.5 லட்சம் வாக்குகளைப் பெறுவது உறுதியாகிவிட்டது என்பதால் அவர் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்பதும் உறுதிதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்