ஈழத் தமிழர் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்-நாராயணசாமி

ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான வி. நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்!

புதுவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாக தலையிடவில்லை என்றாலும், அங்கு வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இப்பிரச்சினை குறித்து அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் தான் பேசியுள்ளதாகவும் நாராயணசாமி கூறினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருந்தும், பாரதிய ஜனதா கட்சி குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தை நிறுத்துவதற்கு முயற்சிக்கிறது என்று கூறிய நாராயணசாமி, 3வது வேட்பாளரை நிறுத்துவதும், மறைமுகமாகவே பாரதிய ஜனதாக் கட்சியை ஆதரிப்பதே ஆகும் என்று கூறினார்.

கொடநாடு எஸ்டேட் சொத்தில் தனக்கு எவ்வித பங்கும் இல்லை என்று ஆதாரங்களுடன் அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நிரூபிக்க வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டங்களை நடத்தச் செய்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடது என்று நாராயணசாமி கேட்டுக் கொண்டார்.

எல்லா தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 50 விழுக்காடு இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்ய முன்வராத கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியையும், புதுவை சுகாதாரத் துறை அமைச்சர் வல்சராஜையையும் கேட்டுக் கொண்டுள்ளதாக நாராயணசாமி கூறினார்.
(யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்