ஜி-8ல் மன்மோகன் சிங் - புஷ் சந்திப்பு : மேனன்!

Webdunia

செவ்வாய், 5 ஜூன் 2007 (20:44 IST)
ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலகின் முன்னேறிய நாடுகளின் ஜி-8 மாநாட்டில் அழைப்பாளராகக் கலந்துகொள்ளச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அங்கு அமெரிக்க அதிபர் புஷ்ஷை சந்தித்துப் பேசுவார் என்று அயலுறவுச் செயலர் ஷிவ்சங்கர் மேனன் கூறினார்!

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், கனடா, இத்தாலி ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஜி-8 மாநாடு ஜெர்மனி தலைநகர் பெர்லியின் உள்ள ஹீலிகென்டேமில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் வளர்ந்துவரும் நாடுகளின் பிரதிநிதிகளாக இந்தியா, பிரேசில், சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் அரசு தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் ஜூன் 8 ஆம் தேதி அமெரிக்க அதிபர் புஷ்ஷை சந்தித்துப் பேசுவார் என்றும், அந்தச் சந்திப்பின் போது இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்தும் பேசப்படும் என்றும் ஷிவ்சங்கர் மேனன் கூறினார்.

அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்களே தவிர, அது 123 ஒப்பந்தத்தை உருவாக்குவதில் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தையாக இருக்காது என்று ஷிவ்சங்கர் மேனன் தெளிவுபடுத்தினார்.

123 ஒப்பந்தத்தை உருவாக்குவதில் வேகம் காட்டுமாறு அதன் மீது பேச்சுவார்த்தை நடத்திவரும் இரு நாடுகளின் குழுவினர் கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும், அதற்குமேல் அப்பிரச்சனையின் மீது பேச்சுவார்த்தை நடைபெறாது என்றும் ஷிவ்சங்கர் மேனன் கூறினார்.

ஜி-8 மாநாட்டின் மீதுள்ள எதிர்பார்ப்புகள் குறித்து ஜெர்மனியின் வேந்தர் ஏஞ்சலா மெர்க்கல் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் மேனன் கூறினார்.

இம்மாநாட்டில் புவி வெப்பமடைவதற்கு காரணமான கரியமில வாயு வெளியேற்றம் குறித்தும், எரிசக்தி பாதுகாப்பு குறித்தும் விரிவாக பேசப்படும் என்று எதிர்பார்ப்பதாக மேனன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்