குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டில் நேற்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 24 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, ராஜஸ்தான் கலவரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநில நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் கூட்டத்தில் விளக்கிக் கூறினார்.
கூட்டத்தில், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ராஜஸ்தான் கலவரத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தகவலை கூட்டம் முடிந்ததும் அகில இந்திய காங்கிரஸ் கழகப் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலிலும், துணை குடியரசுத் தலைவர் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்துமா? என்று அவரிடம் கேட்டதற்கு; துணை குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் பற்றி பேசவில்லை என்றும், துணை குடியரசுத் தலைவர் தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த தீர்மானித்தால் அந்த வேட்பாளரையும் சோனியாகாந்தி முடிவு செய்வார் என்றும் பதில் அளித்தார்.
ஒருமித்த கருத்துடன் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கூறி இருக்கிறாரே? என்று கேட்டதற்கு; தேசிய ஜனநாயக கூட்டணிக்கென்று சில கருத்துக்கள் இருப்பது போல் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன என்று ஜனார்த்தன் திவிவேதி கூறினார்.