ராஜஸ்தானில் இன்றும் கலவரம், துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி!

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி குஜ்ஜார் சமூகத்தினர் இன்று நடத்திய முழு அடைப்பின் போது நடந்த கலவரத்தில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்!

இவர்களையும் சேர்த்து கடந்த 3 நாட்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது மட்டுமின்றி, குஜ்ஜார் சமூகத்தினர் அதிகம் வாழும் உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேச மாநிலங்களிலும் போராட்டம் பரவி வருகிறது.

சவாஜ் மதோபூர் மாவட்டத்தில் உள்ள பாண்லி நகரில் இன்று ஏற்பட்ட வன்முறையை அடுத்து காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

குஜ்ஜார்களின் போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர ராஜஸ்தான் மாநில அமைச்சர்கள் 4 பேர் அடங்கிய குழு இன்று 2வது கட்டமாக குஜ்ஜார் மகா சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அரசு கூறினாலும், மறுபக்கத்தில் போராட்டம் தீவிரமாகி வருவதால் ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. ரயில்கள், பேருந்துகள் ஓடவில்லை. பல இடங்களில் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து ஆக்ரா செல்லும் முக்கிய தேச நெடுஞ்சாலையில் பல இடங்களில் காலை மறியல் நடந்ததால் போக்குவரத்து பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதென செய்திகள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்