இந்தியாவின் பாதுகாப்பிற்கு எப்படிப்பட்ட அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொண்டு முறியடிக்கும் ஆற்றல் உள்ளது என்றாலும், பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே நிரந்தரமாகத் தீர்வு காண முடியும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்!
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஒய்.பி. சவான் எழுதியிருந்த குறிப்புகளின் அடிப்படையில் 1965 ஆம் ஆண்டு நடந்த போர் குறித்து எழுதப்பட்ட புத்தகத்தை தலைநகர் டெல்லியில் இன்று வெளியிட்டுப் பேசிய பிரதமர் நமது ஆயுதப் படைகள் எப்படிப்பட்ட சவாலையும் சந்திக்கும் ஆற்றல் பெற்றவை. அது குறித்து எவருக்கும் எந்த சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. தேச பாதுகாப்பிற்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் உரிய வகையில் முறியடிக்கும் உறுதி நம்மிடம் உள்ளது என்று கூறினார்.
பலம் இருக்கும் அதே அளவிற்கு நம்மிடம் ஞானமும் உள்ளது. இருதரப்பு அல்லது அரசியல் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனில் பேச்சுவார்த்தையின் மூலமே அதனை சாதிக்க முடியும் என்கின்ற நம்பிக்கையும், துணிச்சலும் நம்மிடம் உள்ளது என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங், எல்லோருக்கும் திருப்தி அளிக்கக்கூடிய கெளரவமான தீர்வை ஏற்பதற்கு இந்தியா தயாராகவே உள்ளது என்று கூறினார்.
இந்திய ராணுவத்திற்கும் அரசியல் நிர்வாகத்திற்கும் இடையே முதி்ர்ச்சியுற்ற சமன்பாட்டுடன் கூடிய உறவு இருந்ததை சவானின் புத்தகம் மிக அருமையாக எடுத்துக் காட்டியுள்ளது என்று கூறிய மன்மோகன் சிங், நமது ஆயுதப் படைகளுக்கும், அரசியல் தலைமைக்கும் இடையிலான உறவு ஜனநாயகத்தின் மிளிரும் உதாரணமாக உள்ளது என்று கூறினார்.
முன்னேறிய உலக நாடுகளில் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகள் சீருடை அணிந்த ராணுவத்தினரால் தூக்கியெறியப்படுவதை கண்டுவரும் நாம், விடுதலைப் போராட்டத்தில் இருந்து இன்று வரை நமது ஜனநாயகத்தை கட்டிக் காத்துவரும் அமைப்புகள் குறித்து நாம் பெருமைப்படலாம் என்று கூறினார்.