என்.பி.டி.யில் கையெழுத்திட்டால் மட்டுமே இந்தியாவிற்கு யுரேனியம் : ஆஸ்ட்ரேலியா!

அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத வரை இந்தியாவிற்கு யுரேனிய எரிபொருள் அளிக்கப்படமாட்டாது என்று ஆஸ்ட்ரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்!

தி ஏஜ் என்ற ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ஆஸ்ட்ரேலிய அமைச்சர் இயன் மெக்ஃபர்லீன் இவ்வாறு கூறியுள்ளார்.

"ஆஸ்ட்ரேலிய யுரேனிய தொழிற்சாலைகள் இந்தியாவின் ஒத்துழைப்பின்றியே வெற்றிகரமாக செயல்படும். இதுதான் எனது பதில். இந்தியா அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடும் வரை, யுரேனிய விற்பனைக்கான தடை நீடிக்கும்" என்று கூறினார்.

அணு மின் நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் யுரேனிய எரிபொருளை இந்தியாவிற்கு விற்பனை செய்வதில்லை என்ற கொள்கையை தளர்த்திக்கொள்வது குறித்து ஆஸ்ட்ரேலியா தீவிர பரிசீலனை செய்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், ஆஸ்ட்ரேலிய அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்தாகவுள்ள அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், ஆஸ்ட்ரேலியா, இந்தியாவிற்கு யுரேனியம் விற்பதை அனுமதிக்கும் ஒரு சமிஞ்சையாக அமையலாம்.

இதையடுத்து, ஆஸ்ட்ரேலியாவின் முக்கிய வணிக நாடான இந்தியாவிற்கு யுரேனியத்தை விற்கும் வகையில் நமது கொள்கையை தளர்த்திக் கொள்ளலாம் என்று ஆஸ்ட்ரேலிய பிரதமர் ஜான் ஹோவார்ட் சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

யுரேனியம் விற்பனை குறித்துப் பேச்சு நடத்த இந்தியாவின் தூதராக ஷியாம் சரண் சென்ற போது, அணு எரிபொருளை ஏற்றுமதி செய்வது குறித்த கொள்கையை தளர்த்திக் கொள்வது குறித்து ஆராயப்படும் என்று ஆஸ்ட்ரேலியா கூறியது.

"இந்தியா அதிக பொறுப்பு நிறைந்த நாடு என்பது எங்களுக்குத் தெரியும். இந்தியா - ஆஸ்ட்ரேலியா இடையேயான உறவு வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவுடனான உறவு எங்களுக்கு மிக மிக முக்கியமானது. இதை எப்போதும் நாங்கள் நினைவில் வைத்திருப்போம்" என்று ஷியாம் சரணிடம், ஆஸி. பிரதமர் ஹோவார்ட் கூறியிருந்தார்.

ஆனால், ஆஸ்ட்ரேலிய அமைச்சர் இயன் மெக்பர்லேன் நேற்று நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவிற்கு யுரேனியம் கிடையாது என்று கூறியிருப்பதைப் பார்த்தால் இந்த பிரச்சினை மீண்டும் துவங்கிய இடத்திற்கே திரும்பி வந்துவிட்டதைப் போன்று உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்