ஹைதராபாத் குண்டு வெடிப்பு திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் : ஆந்திர காவல்துறை!

ஹைதராபாத்தில் உள்ள 400 ஆண்டுக்கால பழமை வாய்ந்த மெக்கா மஸ்ஜித் எனும் மசூதியில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு நன்கு திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்று ஹைதராபாத் நகர காவல் ஆணையர் பல்வீந்தர் சிங் கூறியுள்ளார்!

இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன குண்டும், வெடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட முறையும், இது நன்கு திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்பதை உறுதி செய்கிறது என்று கூறிய பல்வீந்தர் சிங், சதிகாரர்கள் விட்டுச் சென்ற சில ஆதாரங்களை கைப்பற்றியுள்ளதாகவும், அதன் மீது தீவிர புலனாய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மராட்டிய மாநிலம் மாலிகானில் நடந்தது போலவே வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம்கள் பெருமளவிற்கு மசூதிக்குள் தொழுகையில் இருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மசூதிக்குள் வைக்கப்பட்ட குண்டு தவிர, மசூதியின் வாயில் அருகேயும் ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்ட குண்டுகளை காவல் துறையினர் கைப்பற்றினர்.
ஹைதராபாத் குண்டு வெடிப்பு திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் : ஆந்திர காவல்துறை!

குண்டு வெடித்தவுடன் தொழுகையில் இருந்தவர்கள் வேகமாக வெளியேறும் போது, வெடிக்கச் செய்வதற்காக வெளி வாயிலில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவைகள் இயக்கப்படாததால் வெடிக்கவில்லை என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

குண்டு வெடித்த இடத்தில் இருந்து 5 செல்போன் சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இத்தாக்குதலை வங்கதேசத்தில் இருந்து இயங்கிவரும் ஹர்கத் உல் ஜிகாத் ஈ இஸ்லாமி எனும் அமைப்பு நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த இயக்கத்தோடு தொடர்புடைய ஷாஹித் பிலால் என்பவனை பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, குண்டு வெடிப்பில் படுகாயமுற்ற மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து குண்டு வெடிப்பிலும், கலவரத்திலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்