ஐஐடி, ஐஐஎம், மருத்துவம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
மத்திய அரசின் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்திற்கு நீதிபதிகள் அரிஜித் பசாயத், லோகேஷ்வர் பன்டா ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்றக் குழு இடைக்காலத் தடை விதித்தது.
இவ்வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசின் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான நீதிமன்றக் குழு இன்று தீர்ப்பளித்தது.
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரிக்கும் என்று நீதிமன்றக் குழு உத்தரவிட்டது.