தமிழர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு - இலங்கையை வலியுறுத்தும் பான் கீ மூன்
வியாழன், 18 அக்டோபர் 2012 (10:53 IST)
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு தோட்டத் தொழில்துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கேவிடம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள சமரசிங்கே பான் கீ மூனை நேரில் சந்தி்த்துப் பேசினார். அப்போது, அவரிடம் தமிழர் பிரச்னையில் இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பான் கீ மூன் கேட்டறிந்தார்.
மேலும், இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பற்கான முயற்சிகளை விரைவுப்படுத்துமாறு அவர் இலங்கை அமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடியமர்த்துதல் குறித்தும் அவர் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அகதிகள் முகாம் அனைத்தும் மூடப்பட்டுவிட்டதாகவும், அங்கிருந்த மக்கள் அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.