பாக்.கிற்கு அணுகுண்டு தயாரிப்பில் சீனா உதவியதால் காஷ்மீர் தீவிரவாதம் தீவிரமடைந்தது!
செவ்வாய், 16 அக்டோபர் 2012 (16:35 IST)
FILE
பாகிஸ்தானுக்கு அணுகுண்டு உற்பத்தில் சீனா உதவி புரிந்தது 1989ஆம் ஆண்டு காஷ்மீர் தீவிரவாதத்தைத் தூண்டிவிட உதவி புரிந்தது என்று ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரியும் இதில் ஆராய்ச்சி செய்து வருபவருமான ராஜா மேனன் என்பவர் தெரிவித்துள்ளார்.
"1989ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் அணுகுண்டு முயற்சிகள் பற்றி அதிகம் தெரியாது. இந்திய மூத்த பத்திரிக்கையாளர் குல்திப் நய்யாரின் நேர் காணலில் அணு விஞ்ஞானி ஏ.கியு.கான் கூறும்போது அணுகுண்டு வைத்துக் கொள்வது பற்றி குறிப்பிட்டுள்ளார். 1989ஆம் ஆண்டு அஜாதி இயக்கம் தோன்றுவதும் இதுவும் இணைகின்றன. பாகிஸ்தானின் சக்தி குறித்து திடீரென ஒரு விஷயம் தெரியவந்தது" என்று கூறுகிறார் ராஜா மேனன்.
பாகிஸ்தான் அணுகுண்டு த்யாரிக்கும் தன்னம்பிக்கையை பெறாமல் இருந்திருந்தால் காஷ்மீர் தீவிரவாதம் இவ்வளவு தீவிரம் அடைந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் ராஜா மேனன்.
இது குறித்து இவர் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கூறும்போது, "பாகிஸ்தானுக்கு அணுகுண்டு விவகாரத்தில் சீனா உதவி புரிந்ததற்கும், பாகிஸ்தான் தூண்டிவிடும் எல்லை கடந்த பயங்கரவாத செயல்பாடுகளுக்கும் நேரடி தொடர்புள்ளது. இதனை நாம் சீன அதிகாரிகளிடம் கூறுவதில் தயக்கம் காட்டி வருகிறோம்" என்று பேசியுள்ளார் ராஜா மேனன்.
கார்கில் போரும் அதன் பிறகான லச்கரே தயீபாவின் பயங்கரவாத செயல்பாட்டிற்கான உதவுதலும் துணைக் கண்டத்தில் பழைய மாதிரியான போர் முறை சாத்தியமில்லை என்ற தைரியம் வந்தபிறகே நிகழ்ந்துள்ளது என்கிறார் மேனன்.
சீனாவின் பாகிஸ்தானுக்கான அணு உதவியின் மிக மோசமான விளைவு பயங்கரவாத சக்திகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதமே என்று திட்டவட்டமாக கூறுகிறார் ராஜா மேனன்.
"1985ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடனான சீன உறவுகள் மேம்பட்டு வந்தன. ஆனால் இதே காலக்கட்டத்தில்தான் சீனா பாகிஸ்தானுக்கு அணுகுண்டு தொழில்நுட்பத்திலும் உதவி புரிந்தது என்பது சற்று நம்புவதற்கு கடினமான விஷயம்தான்.
ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு சீனதலைவர்கள் வருகை தரும் போதும், அதேபொல் ஒவ்வொரு முறை இந்தியத் தலைவர்கள் சீனாவுக்குச் செல்லும்போதும் திரைக்குப் பின்னால் சீனா பாகிஸ்தானுக்கு முக்கியமான ஆயுதங்களையோ, அதற்கான தொழில்நுட்பங்களையோ வழங்கி வந்துள்ளது. இவ்வாறு கூறிய ராஜா மேனன், சீனாவின் இரட்டை வேடத்தை பட்டியலிடுகிறார்:
1981- 83: இந்தியாவுக்கு சீனாவின் அயல்நாட்டு மந்திரி ஹுவாங் ஹுவா வருகை தருகிறார். இப்போதுதான் சீனா, பாகிஸ்தானுடன் அணு ஒப்பந்தம் செய்து கொண்டது. பாகிஸ்தானுக்கு சீனா புளோடோனியம் அணுகுண்டு வடிவமைப்பை வழங்கியது; அமெரிக்க உளவு ஸ்தாபனம் சி.ஐ.ஏ. பாகிஸ்தான் அணு விஞ்ஞானி கானின் சூட்கேசை திறந்தபோது சீன குண்டு வடிவமைப்பை கண்டுள்ளனர்.
1987- 88: இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சீனாவுக்கு செல்கிறார். அப்போதுதான் சீனாவிலிருந்து இதற்கான தொழில்நுட்ப பொருட்கள் பாகிஸ்தானுக்கு செல்கிறது.
1989- 90: சீனத் தலைவர் லீ பெங் இந்தியா வருகிறார்; சீனா பாகிஸ்தானின் குண்டை லாப் நாரில் சோதனை செய்கிறது; பாகிஸ்தான் அணுசக்தி நாடாகிறது. அணு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. எம் 11 ஏவுகணைகள் பாகிஸ்தானுக்குச் செல்கிறது.
1992: இந்திய ஜனாதிபதி வெங்கட் ராமன் சீனா செல்கிறார்; சீனா குண்டுகளை வெடித்து சோதனை மேற்கொள்கிறது. எம் 11 ஏவுகணைகள் ஏற்றுமதி பாகிஸ்தானுக்கு நிறைவடைகிறது.
1993: பிரதமர் நரசிம்ம ராவ் சீனாவுக்கு செல்கிறார்; பாகிஸ்தானுக்கான இரண்டாவது எம் 11 ஏவுகணை ஏற்றுமதிகள் தொடங்குகிறது.
1994- 96: சீன அதிபர் ஜியாங் செமின் இந்தியா வருகிறார்; எம் 9 ஏவுகணை தொழிற்சாலை பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறது. அணு உலை குஷாபிற்கு அனுப்பப்படுகிறது இது புளோடினியம் குண்டு தயாரிக்க; எம்9 தொழிற்சாலை பாகிஸ்தானின் ஃபடேயுங்கில் தொடங்குகிறது.
1997- 99: இந்திய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் சீனா செல்கிறார் அதாவது 1999ஆம் ஆண்டு. வடகொரியா நோ-டாங் ஏவுகணையை சீனாவுக்கு அனுப்புகிறது. இது சீனாவில் எரிபொருள் நிரப்பபடுகிறது; பாகிஸ்தான் காவ்ரி/ஷாஹீன் 1-ஐ சோதனை செய்கிறது.
2000: சீனத் தலைவர் ஜூ ரொங்ஜி இந்தியாவுக்கு வருகை தருகிறார். பாகிஸ்தான் விஞ்ஞானிகளுக்கு சீன பயிற்சி உதவி தொடர்கிறது.