இலங்கை இராணுவத்தினரின் போர்க் குற்ற ஆதாரங்களை அம்பலப்படுத்திய சேனல் 4 தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இலங்கை அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ள பிரிட்டன், ஊடகங்களை நாங்கள் கட்டுப்படுத்துவது இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளது.
சேனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே மேற்கூறிய விளக்கத்தை அளித்து கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகம்,செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சேனல் 4 என்பது சுதந்திரமான ஒரு ஒளிபரப்பாளராகும்.ஒவ்வொரு ஜனநாயகத்திலும் சுதந்திர ஊடகம் முக்கியமானது என பிரிட்டன் நம்புகிறது.
ஊடக நிறுவனங்கள் பொருத்தமான ஒழுக்க மற்றும் சட்ட ரீதியான தராதரங்களை பேணுவதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான பொறிமுறையை பிரிட்டன் கொண்டுள்ளது. ஆனால் ஊடகங்களின் உள்ளடக்கங்களை அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை.