தமிழக வறுமை பிரச்சனையை முதலில் தீருங்கள்: ஜெ.வுக்கு பசில் ராஜபக்ச எக்காள அட்வைஸ்!

வெள்ளி, 29 ஜூலை 2011 (20:26 IST)
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் பற்றி கவலைப்படும் முன்னர் முதல்வர் ஜெயல்லிதா தமிழ்நாட்டில் வறுமை நிலையில் உள்ளவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச எக்காளமாக கூறியுள்ளார்.

இலங்கையில் அண்மையில் தமிழர் பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த வெற்றி தமிழ் மக்களின் ஆணையாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தெருவிளக்குகளைப் பொருத்தும் ஆணையையே உள்ளாட்சி தேர்தல் ூலம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழர்கள் வழங்கியுள்ளதாக பசில் கிண்டலாக கூறியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் உண்மையில் தெருவிளக்குகளை பொருத்துவதற்கும், தண்ணீர் குழாய்களை அமைப்பதற்கும் தான் அதிகாரம் கொண்டது.அதற்கே கூட்டமைப்புக்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியைத் தமிழ் மக்களின் ஆணை என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் இடம் பெயர்ந்தவர்களின் நிலை குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரியும், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்தபோது கவலை வெளியிட்டுள்ளது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பசில் ராஜபக்ச, அவர்கள் நட்பு ரீதியாக கவலையை வெளியிட்டிருந்தால், அதை வரவேற்பதாகவும், ஆனால் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினையை அமெரிக்கா முதலில் தீர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையை விட தமிழ்நாட்டில் வறுமைநிலை மோசமாக உள்ளது தமக்கு தெரியும் என்று கூறியுள்ள அவர், இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் பற்றி கவலைப்பட முன்னர் ஜெயல்லிதா, தமிழ்நாட்டில் வறுமை நிலையில் உள்ளவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும், அவர்களின் எந்தவொரு கரிசனையும் எமது நல்லிணக்க முயற்சிகளுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்