இந்திய-அமெரிக்க மருத்துவருக்கு புலிட்சர் விருது

செவ்வாய், 19 ஏப்ரல் 2011 (11:32 IST)
அமெரிக்காவின் மதிப்பிற்குரிய புலிட்சர் விருது இந்திய-அமெரிக்க புற்று நோய் மருத்துவரான சித்தார்த்த முகர்ஜிக்கு கிடைத்துள்ளது.

புனைவல்லாத பிரிவின் கீழ் சித்தார்த்த முகர்ஜி எழுதிய "தி எம்பரர் ஆஃப் ஆல் மாலடீஸ்: எ பயாகிரஃபி ஆஃப் கேன்சர் (The Emperor of All Maladies: A Biography of Cancer) என்ற புற்று நோய் பற்றிய ஆய்வு நூலுக்கு புலிட்சர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் புற்று நோய் மருத்துவராக இருந்து வரும் சித்தார்த்த முகர்ஜி, இந்த நூலில் புற்று நோயின் வரலாற்றை சொந்த அனுபவம், விஞ்ஞான உண்மைகள் ஆகிய அடிப்படைகளில் சிறப்பாக எழுதியிருப்பதாக புலிட்சர் விருது அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நூலுக்கு விருது கிடைத்ததன் மூலம் 10,000 அமெரிக்க டாலர்கள் பரிசு முகர்ஜிக்கு கிடைக்கவுள்ளது. கொலம்பிய பல்கலைக் கழகத்தில் மருந்துத் துறை பேராசிரியராகவும், அங்குள்ள புற்று நோய் சிகிச்சை மையத்தில் மருத்துவ சிகிச்சையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த நூலில் காலங்காலமாக புற்று நோய் பற்றி வெளிவந்த ஆய்வுகள் சிகிச்சைக்கு கிடைத்த வெற்றிகள், தோல்விகள், மரணங்கள், விசித்திர மாற்றங்கள் ஆகியவற்றை சுவைபட பேசியுள்ளதாக புலிட்சர் நடுவர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

புற்று நோயைக் கதாநாயகனாகக் கொண்ட ஒரு இலக்கிய திரில்லராக இந்த நூல் உள்ளது என்று மற்றொரு விமர்சகர் பாராட்டியுள்ளார்.

புற்று நோய் சிகிச்சைகளின் எதிர்காலம் பற்றியும் டாக்டர் முகர்ஜீ விரிவாக இந்த நூலில் எழுதியுள்ளார் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்