அணு உலைகளின் வெப்பத்தைத் தணிக்க தீவிர முயற்சி

வியாழன், 17 மார்ச் 2011 (13:59 IST)
FILE
ஜப்பானில் பூகம்பத்தால் பாதிப்பிற்குள்ளாகி செயலிழந்த அணு உலைகளில் எரிபொருள் கற்றைகள் வெப்பமடைந்து வெடித்துச் சிதறுவதைத் தடுக்க ஹெலிகாப்டர் மூலம் அவைகளின் மீது நீரை ஊற்றி தணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜப்பான் இராணுவத்தின் சினூக் ஹெலிகாப்டர்கள் இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சினூக் ஹெலிகாப்டர்கள் கடலின் மீது பறந்து நீரை கொண்டு வந்து, அணு உலைகளின் மீது ஊற்றுகின்றன. ஆனால் அங்கு அடிக்கும் காற்றினால் நீர் முழுவதும் அணு உலைகளின் மீது விழவில்லை.

அணு உலைகளின் வெப்பத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பணிக்கு உதவும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.ஆயினும் இம்முயற்சி பெரிய பலனை அளிக்காததால் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அணு உலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றி அணுக் கதிர் வீச்சு எந்த அளவிற்கு உள்ளது என்பதை நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக ஜப்பான் அரசு செயலர் யூகியோ ஈடானோ கூறியுள்ளார்.

இதற்கிடையே கதிர் வீச்சு தாக்கத்தால் 5 ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைப் போன்று ஜப்பானிலும் பெரும் அணு விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது என்று பிரான்ஸ் நாட்டு அணு விஞ்ஞானி கூறியுள்ளார்.

பிரான்சின் அணுக் கதிர் வீச்சு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தியரி சார்ல்ஸ், “அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது. ஞாயிற்றுக் கிழமை முதல் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் தீர்வைத் தரவில்லை. எனக்கு நம்பிக்கையில்லை” என்று கூறியுள்ளார்.

அப்படி ஒரு விபத்து ஏற்பட்டால் எந்த அளவிற்கு கதிர் வீச்சு அபாயம் இருக்கும் என்று கேட்டதற்கு, “செர்னோபில் விபத்தில் வெளியான கதிர் வீச்சிற்கு இணையாக இருக்கும்” என்று சார்ல்ஸ் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஜப்பான் பூகம்பத்திலும், ஆழிப்பேரலைத் தாக்குதலிலும் உயரிழந்தோர் எண்ணிக்கை 5,178 பேர் என்றும், மேலும் 8,606 பேர் காணவில்லை என்றும் ஜப்பான் அரசு உறுதி செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்