ஈரான், வட கொரியா ஆயுதங்கள்: சிறிலங்க அரசுக்கு யுஎஸ் விடுத்த எச்சரிக்கை

புதன், 5 ஜனவரி 2011 (17:10 IST)
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரின் இறுதி கட்டத்தில் ஈரான், வட கொரிய நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்க சிறிலங்க அரசு முற்பட்டபோது அதற்கு அமெரிக்க கடுமையான எச்சரிக்கை விடுத்த தகவல் பரிமாற்றத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதத்தின் முதல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கியிருந்த தமிழர்கள் மீது சிறிலங்க படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய நேரத்தில், இந்த எச்சரிக்கையை சிறிலங்க அரசிற்கு அமெரிக்க அரசு விடுத்துள்ளது.

சிறிலங்க அரசிற்காக இராணுவ தளவாடங்களை வாங்கும் நிறுவனம், ஈரான், வட கொரியா நாடுகளிடமிருந்து அதிக அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை (Lethal Military Equipments - LME) வாங்க முயற்சிப்பதாக கூறியுள்ள அந்த எச்சரிக்கை கடிதம், வட கொரியாவிடமிருந்து ராக்கெட்டில் செலுத்தும் குண்டுகளை (ஆர்பிஜி) வாங்க சிறிலங்க அரசு திட்டமிடுவதை சுட்டிக்காட்டி, அப்படி எந்த ஆயுதங்களையாவது ஈரான், வட கொரிய நாடுகளிடமிருந்து வாங்கினால், ஐ.நா.பாதுகாப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, சிறிலங்க அரசிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

அப்படி எந்த ஆயுத கொள்வனவும் செய்யப்படவில்லை என்று சிறிலங்க அரசு மறுத்துள்ளது. ஆனால் அதனை இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் சிறிலங்க அரசின் விளக்கத்தை ஏற்கவில்லை என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்