ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர் மீது தாக்குதல்

புதன், 9 டிசம்பர் 2009 (10:47 IST)
ஆஸ்ட்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் இந்திய மாணவர் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 23 வயது மாணவர் ஒருவர், படித்து கொண்டே, வாடகை கார் ஓட்டுனராக இருந்து வந்தார். இன்று அதிகாலை மெல்போர்னில் உள்ள பிரவுன்ஸ்விக் மேற்கு தெருவில் தனது காதலி வீட்டின் முன் காரை நிறுத்திய அவர், தொலைபேசி மூலம் காதலிக்கு அழைப்பு விடுத்தார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் இந்திய மாணவரின் மார்பில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். தொலைபேசியில் மாணவரின் கதறலைக் கேட்டு வீட்டு வாசலுக்கு வந்த அவரது காதலி, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவரை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக ஆஸ்ட்ரேலிய வாழ் இந்தியர்கள் மீது அடிக்கடி இனவெறித் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையிலும், இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் அந்நாட்டில் தொடர்ந்து நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்