பாகிஸ்தான் அணு ஆயுத சக்தியையும், எண்ணிக்கையையும் பெருக்குகிறது: அமெரிக்கா

சனி, 5 செப்டம்பர் 2009 (14:02 IST)
தன்னிடமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை பெருக்குவது மட்டுமின்றி, அவைகளின் சக்தியை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான் என்று அமெரிக்க காங்கிரஸின் ஆய்வறிக்கை கூறுகிறது.

அமெரிக்க காங்கிரஸின் ஆய்வுச் சேவை எனும் அமைப்பு, பாகிஸ்தானிடம் சற்றேறக்குறைய 60 அணு ஆயுதங்கள் உள்ளது என்றும், அந்த எண்ணிக்கை அதற்கு மேலும் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதெனவும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அயலுறவு குழுவிற்கு கடந்த வாரம் அளிக்கப்பட்ட வேறொரு அறிக்கை பாகிஸ்தானிடம் 70 முதல் 90 அணு ஆயுதங்கள் உள்ளன என்று கூறியிருந்தது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சுதந்திர அமைப்பான இந்த ஆய்வு அமைப்பு, பாகிஸ்தான் பல்வேறு கால கட்டங்களில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையிலேயே தங்களுடைய இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தாங்கள் விற்ற ஹார்ப்பூன் ஏவுகணையில் மாற்றம் செய்துள்ளது என்றும், தனது அணு ஆயுத எண்ணிக்கையை பாகிஸ்தான் அதிகரித்தும், மேம்படுத்தியும் வருகிறது என்றும், அவைகளால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதெனவும் கடந்த சில நாட்களாக அமெரிக்க ஊடகங்களும், அந்நாட்டு நாடாளுமன்றக் குழுக்களும் அடுத்தடுத்து அதிரடியாக விவரங்களை வெளியிட்டு வருகின்றன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தனது உறுதியான கூட்டாளி என்று பாகிஸ்தானைக் கூறிவந்த அமெரிக்கா, தற்போது அதற்கு எதிராக வெளியிட்டுவரும் தகவல்கள் அதன் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்