மும்பை தாக்குதல் : இந்தியா அளித்த ஆதாரத்தை நிராகரித்தது பாக்.
புதன், 26 ஆகஸ்ட் 2009 (15:24 IST)
மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியா 6 ஆவது முறையாக அளித்த ஆதாரங்களை ஏற்க முடியாது என்று கூறி அதனை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள குற்றவாளிகளுக்கு இருக்கும் ஆதாரங்கள் கொண்ட ஐந்து கோப்புகளை ஏற்கனவே பாகிஸ்தானிடம் இந்தியா அளித்திருந்தது.
இந்நிலையில், மும்பை தாக்குதல் தொடர்பாக மேலும் ஆதாரங்கள் அடங்கிய ஆறாவது கோப்பு ஒன்றையும் கடந்த 21 ஆம் தேதியன்று பாகிஸ்தானிடம் இந்தியா அளித்திருந்தது.
அதில் மும்பை தாக்குதலில் ஜமாத் உத் தவா இயக்கத்தலைவர் ஹஃபீஷ் முகமத் சையீத்திற்கு உள்ள தொடர்பு பற்றி குறிப்பிட்டிருந்த இந்தியா, அவரை கைது செய்து மும்பை நீதிமன்றத்தில் நிறுத்த உதவுமாறு பாகிஸ்தானை கேட்டுக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
ஆனால் இந்தியா கடைசியாக அளித்த கோப்பு ஏற்கத்தக்கதல்ல என்று கூறி அதனை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மும்பை தாக்குதல் மற்றும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்தியா சரியான கூடுதல் தகவலை அளிக்க தவறினால், எதிர்காலத்தில் இந்தியாவில் நடைபெறும் எந்த ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கும் பாகிஸ்தான் பொறுப்பாக முடியாது என்று தெரிவித்தார்.