மழை, வெள்ளத்தில் வன்னி முகாம்கள்! மரண வேதனையில் தமிழர்கள் தவிப்பு!
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2009 (14:10 IST)
இலங்கையின் வன்னிப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பொழிந்த அடை மழையால் அங்கு இடம் பெயர்ந்த தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மழை நீர் தேங்கியதால் அங்குள்ள மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
PR photo
PR
வன்னியில் ஏற்பட்டுள்ள இந்த அபாயம் குறித்து இலங்கையில் இருந்து வந்த அவசரச் செய்தியை அடுத்து, சென்னையில் உடனடியாக பத்திரிக்கையாளர்களைக் கூட்டிய மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் (பி.யு.சி.எல்.) தமிழகத் தலைவர் முனைவர் சுரேஷ், மாணிக்கம் பண்ணையில் அமைந்துள்ள மண்டலம் 2 (இராமநாதன் முகாம்), மண்டலம் 3 (ஆனந்த குமாரசாமி முகாம்), மண்டலம் 4 (பெயரிடப்படாத முகாம்) ஆகிய மூன்று முகாம்களில் மழை நீர் தேங்கியுள்ளது என்றும், சில இடங்களில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது என்றும் கூறினார்.
இந்த மூன்று மண்டலங்களிலும் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 65,000 + 43,000 + 41,000 = மொத்தம் 1,49,000 தமிழர்கள் கடும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று கூறிய சுரேஷ, மண்டலம் 4,5,6 ஆகியவற்றின் நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை இந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு பொது சமையல் கூடத்தில் உணவு சமைக்கப்பட்டு அளிக்கப்பட்டு வந்தது. அது நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக குறைவான அளவிற்கு சமைத்து உண்ணுவதற்கான உணவுப் பொருட்களையும், சமைப்பதற்காக விறகுகளையும் சிறிலங்க அரசு விநியோகித்துள்ளது. இந்த மழையினால் அவர்கள் இருந்த கூடாரங்களில் தண்ணீர் வந்துவிட்டதாலும், வெளியில் எங்கும் நீர்க்காடாக உள்ளதாலும் சமைக்க முடியாமலும், உண்ண உணவின்றியும் மக்கள் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
PR photo
PR
சிறுவர்களும், வயதானவர்களும், போரில் காயமுற்றவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக அச்செய்திகள் கூறுகின்றன.
இந்த முகாம்கள் அமைந்துள்ள இடங்கள் வன்னிக்காட்டில் தாழ்வான பகுதிகள் என்பதால் மழைக்காலத்தில் இப்படிப்பட்ட அபாயம் ஏற்படும் என்று அங்கிருந்து ஏற்கனவே தகவல் வந்தது. அந்த நிலையே இப்போது ஏற்பட்டுவிட்டது. அது செம்மண் பூமி என்பதால், அப்பகுதி சேறும் சகதியுமாக ஆகியுள்ளது. இதனால் நிவராணப் பொருட்களை கொண்டு வரத் தயாராகவுள்ள ஐ.நா. மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு அமைப்புகளால் வாகனங்களில் அங்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளதென அந்தத் தகவல்கள் தெரிவிப்பதாக சுரேஷ் கூறினார்.
மரணத்தை ஏற்படுத்தும் அபாயம்!
வன்னி முகாம்களில் சற்றேறக்குறைய 2,88,000 மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு போதுமான அளவிற்கு கழிப்பறை வசதிகள் செய்து தரப்படாததால், ஏற்கனவே பல கழிப்பறைகள் நிறைந்து வடிந்தன.
PR photo
PR
இந்த கழிப்பறைகள் அனைத்தும் பூமியில் குழிதோண்டி தற்காலிக கழிப்பறைகள் உருவாக்கியிருந்தனர். இந்த மழையில் அவைகள் சிதைந்து உடைந்ததால் மனிதக் கழிவுகள் வெளியேறி மழை நீருடன் கலந்து எங்கும் பரவி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அங்கு சுகாதாரமற்ற சூழலே நிலவி வந்தது. இந்த நிலையில் மழையும் பொழிந்து, வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லாவிட்டால் பல நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என்று அச்செய்தி எச்சரிப்பதாக சுரேஷ் கூறினார்.
இப்படிப்பட்ட சூழலை சமாளிப்பதற்கான எந்த முன்னேற்பாடும் முகாம்களில் இல்லை. எனவே அங்கிருந்து மக்கள் வெளியேற முற்பட்டாலும் இயலாத சூழல் உள்ளது. ஏனெனில் அவர்கள் தொட்டால் கையை அறுத்துவிடக் கூடிய கூர்மையான தகடுகளுடன் கூடிய முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களின் நிலைகளை காண வரும் அயல் நாட்டவருக்கும், சில பத்திரிக்கையாளர்களுக்கும் மண்டலம் 0 மற்றும் 1 முகாம்களை மட்டுமே காட்டுகிறது சிறிலங்க அரசு. இங்கு துத்தநாகத் தகடுகளால் ஆன கூரைகள் வேயப்பட்ட குடில்கள் உள்ளன. ஆனால் மற்ற முகாம்களில் ஐ.நா. அளித்த சாதாரண கூடாரங்களில்தான் பெரும்பான்மை மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று சுரேஷ் கூறினார்.
ஐ.நா. நிவாரணம் நிறுத்தப்படும் ஆபத்து!
இதற்கிடையே மற்றொரு அதிர்ச்சியான நிலையும் உருவாகியுள்ளது. வன்னி முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் கீழ்தான் உணவு உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளித்துவரும் உலக நாடுகள் தங்கள் நிதியளிப்பை பெருமளவிற்கு குறைத்துவிட்டதால் வன்னி மக்களுக்கு அளித்துவரும் நிவாரண உதவிகளை ஐ.நா. உலக உணவுத் திட்டம் நிறுத்தும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் வன்னி மக்களை - அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கும் சர்வதேச நாடுகளுக்கும்தான் உள்ளது என்று கூறிய சுரேஷ், வன்னித் தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்க மேலும் ரூ.500 கோடி அளிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதை அளிப்பதற்கு முன்னர், ஆபத்திலுள்ள வன்னி மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுமாறு சிறிலங்க அரசை வற்புறுத்த வேண்டும் என்று கூறினார்.
PR photo
PR
அதுமட்டுமின்றி, இந்தியா அளிக்கும் நிதி உதவிகள் வன்னியில் அகதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குத்தான் செலவிடப்படுகிறதா என்பதை சர்வதேச நடுநிலை நிபுணர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்தியாவும், உலக நாடுகளும், ஐ.நா.வும் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவிட்டால் வன்னி முகாம்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மரண முகாம்கள் ஆகும் நிலை ஏற்படு்ம் என்று சுரேஷ் எச்சரித்தார்.