சான் சூகிக்கு விதிக்கப்பட்ட தண்டனை மனித உரிமை மீறல் : யு.எஸ்.

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2009 (14:02 IST)
மியான்மரில் ஜனநாயகம் மலர போராடி வரும் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை மனித உரிமைகளுக்கான சர்வதேச கொள்கைகளுக்கு எதிரானது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதரக அதிகாரி சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.

சூகி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2,100 க்கும் அதிகமான அரசியல் கைதிகளை, எவ்வித நிபந்தனையுமின்றி மியான்மர் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ரைஸ் கூறினார்.

நீண்ட காலமாக மியான்மர் அரசால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி,வீட்டுக் காவல் விதிமுறைகளை மீறி, தனது ஏரி வீட்டில் அமெரிக்கர் ஒருவரை ரகசியமாக இரண்டு நாள் தங்க வைத்திருந்ததாகவும்,அந்த அமெரிக்கர் ஏரியில் நீந்தியே ரகசியமாக சூயி கி வீட்டுக்குள் புகுந்ததாகவும் குற்றம்சாற்றிய மியான்மர் அரசு, இது தொடர்பாக சூகி மீது வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், சான் சூகிக்கு 18 மாதங்கள் வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டது.இத்தண்டனை,அவர் ஏற்கனவே அனுபவித்து வரும் 20 ஆண்டு கால வீட்டுக்காவல் தண்டனையுடன் கூடுதலாக சேர்த்து அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையிலேயே, அமெரிக்கா தூதர் மேற்கண்டவாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்