இளம் புலிகளை தண்டிக்க மாட்டோம்: ராஜபக்ச

திங்கள், 20 ஜூலை 2009 (19:54 IST)
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்ட 14 வயதிற்குட்பட்ட போராளிகளை தண்டிக்க மாட்டோம் என்று மகிந்தா ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கையின் தென்பகுதியிலுள்ள பதுளை மாவட்டத்தின் மஹியங்கானா என்ற இடத்தில் பேசுகையில் இவ்வாறு கூறிய ராஜபக்ச, புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள 12,13,14 வயதுடைய இளம் போராளிகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று கூறியுள்ளார்.

“கொடூரமான மனம் கொண்டவர்கள் அல்ல நாங்கள். 12,13.14 வயதிலேயே ஆயுதத்தை ஏந்த வைக்கப்பட்டவர்களை நாங்கள் தண்டிக்க மாட்டோம். அவர்களை சீர்திருத்தி சமூகத்தின் அங்கமாக்குவோம் என்று கூறியுள்ளார்.

தென்னிலங்கையில் சிறுவர்கள் பள்ளிக்குச் சென்று படித்துக் கொண்டிருந்தனர், ஆனால் வடக்கில் அவர்களிடம் டி 56 துப்பாக்கிகளை ஏந்தச் செய்தது விடுதலைப் புலிகள் இயக்கம் என்றும் ராஜபக்ச கூறியுள்ளார்.

இதனை ஒரு மனிதாபிமான நடவடிக்கையாகவே ராஜபக்ச அறிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தனது நாட்டு மக்களின் மீதே குண்டுகளை வீசிக் கொன்ற மனித உரிமை மீறல், அவர்களை பாதுகாக்கத் தவறிய குற்றச்சாற்று, போர் குற்றம் புரிந்தது என்று சிறிலங்க அரசிற்கு எதிராக உலக நாடுகள் குற்றம் சுமத்திவரும் நிலையில் இந்த மனிதாபிமான அறிவிப்புச் செய்துள்ளார் ராஜபக்ச.

சிறிலங்க இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பெற்றோரின் அனாதைப் பிள்ளைகள் படித்துவந்த செஞ்சோலை என்ற பள்ளியின் மீது சிறிலங்க விமானங்கள் குண்டு வீசி 64 சிறுவர், சிறுமிகளை கொன்றது. பாதுகாப்பு வலயத்திலிருந்த பள்ளிகள், மருத்துவமனைகள் அனைத்தின் மீதும் குண்டுகள் வீசி அழித்தது சிறிலங்க இராணுவம். யாழ்ப்பாணத்தை கைப்பற்றியவுடன் அங்கிருந்த பள்ளிகளை காலி செய்து விட்டு இராணுவ முகாம்களை அமைத்ததுதான் சிறிலங்க அரசு வடக்குப் பகுதி மக்களுக்கு ஆற்றிய கல்விச் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்