சீனா : கலவர பலி 184 ஆக அதிகரிப்பு

சனி, 11 ஜூலை 2009 (13:45 IST)
சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வடமேற்கு பகுதியான ஷிஞ்சியாங் மாகாணம் இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும்.இங்கு சுமார் 80 லட்சம் உய்குர்ஸ் என்ற பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் தாங்கள் அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் புறக்கணிக்கப்படுவதாக கூறி, தங்களுக்கு சுயாட்சி கோரி போராடி வருகின்றனர்.

இந்நிலையில் , கடந்த மாதம் உய்க்குர்ஸ் இன முஸ்லிம்களுக்கும், சீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த சம்பவத்தை அரசு கையாண்ட விதத்தை கண்டித்து, இம்மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் கடந்த ஞாயிறன்று இஸ்லாமியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரம் மற்றும் போலீஸ் தாக்குதல் ஆகியவற்றில் 156 பேர் பலியானதாகவும், 1000 க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் , காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் சிலர் தற்போது பலியானதையடுத்து , இந்த கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.

இதை தொடர்ந்து மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க உரும்கி நகர் முழுவதும் ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே உரும்கி பகுதியில் உள்ள மசூதிகளை நேற்று முழுவதும் திறக்கக் கூடாது என சீன அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதன் காரணமாக அந்த மசூதிகளில் தொழுகை நடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்