சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விரிவான பிரகடனம் : ஜி 5 கோரிக்கை
வியாழன், 9 ஜூலை 2009 (15:56 IST)
“சர்வதேச அளவில் ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக விரிவான பிரகடனம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்” என்று ஐ.நா.உறுப்பினர்களுக்கு இந்தியா உள்ளிட்ட ஜி 5 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இத்தாலி நாட்டின் லா அக்விலா நகரில் நடைபெற்றுவரும் முன்னேறிய நாடுகளின் அமைப்பான ஜி 8 மாநாட்டிற்கு இடையே, வளர்ந்துவரும் நாடுகளான இந்தியா, பிரேசில், சீனா, மெக்சிகோ, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஜி 5 அமைப்பின் தலைவர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர்.
PIB Photo
PIB
உலகப் பொருளாதாரப் பின்னடைவு, புவி வெப்பமடைதல் ஆகிய பிரச்சனைகளில் தங்களுடைய ஆலோசனைகளை ஜி 8 நாடுகள் அமைப்பிற்கு ஜி 5 நாடுகள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஜி 5 நாடுகளின் அயலுறவு செயலர்கள் இடையிலான கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில், உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த ஜி 5 அமைப்பு, சர்வதேச அளவில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க விரிவானதொரு சட்ட அடிப்படை வேண்டும் என்று முடிவு செய்த்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக விரிவான சர்வதேச பிரகடனம் (Comprehensive convention on International Terrorism - CCIT) ஒன்றை நிறைவேற்ற ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என்ற அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன், “சர்வதேச பயங்கரவாதத்தி்றகு எதிராக ஒரு விரிவான பிரகடனம் தேவை என்ற இந்தியாவின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டிலோ அல்லது அதற்குப் பிறகோ நிறைவேற்றப்படலாம்” என்று கூறினார்.
பயங்கரவாதத்தி்றகு எதிராக ஒரு விரிவான பிரகடனம் வேண்டும் என்று உலக நாடுகள் விரும்பினாலும், பயங்கரவாத செயல் அல்லது நடவடிக்கை எது என்பதை வரையறை செய்வதில் நாடுகளுக்கு இடையே முரண்பாடு நிலவி வருவது அதற்கு ஒரு தடையாக உள்ளது.
இந்த நிலையில், “பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கான வரையறை குறித்து மிக நெருக்கமான ஒத்த கருத்து உருவாகியுள்ளது” என்று சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், இதுவரை பயங்கரவாதம் என்றால் என்ன என்பது குறித்த வரையறை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.