இலங்கை இனப் படுகொலைகளை விசாரிக்க விசாரணை ஆணையம்: ஒபாமாவுக்கு வேண்டுகோள்
புதன், 1 ஜூலை 2009 (12:26 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க அனைத்துலக விசாரணை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை 6 மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அனைத்துலக மன்னிப்புச் சபையின் அமெரிக்க செயல் இயக்குநர் லாரி கோக்ஸ், த கார்டர் நிலையத்தின் மனித உரிமை பிரிவு இயக்குநர் கரீன் ரையன், சுதந்திர இல்லம் என்ற அமைப்பின் செயல் இயக்குநர் ஜெனிபர் வின்ட்சர், அனைத்துலக மனித உரிமை குழுவின் தலைவர் ராபர்ட் அர்சனால்ட், மனித உரிமை மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் பெலிஸ் டி.கேர், மனித உரிமைக்கான மருத்துவர்கள் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பிராங் டொனாக்கே ஆகியோர் இது தொடர்பாக விரிவான மனு ஒன்றை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.