இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு : ஆஸி. பிரதமர் உறுதி
புதன், 24 ஜூன் 2009 (17:29 IST)
இந்திய மாணவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆஸ்ட்ரேலிய அரசு மேற்கொள்ளும் என்று அந்நாட்டின் பிரதமர் கெவின் ரத் தெரிவித்துள்ளார்.
கேன்பெராவில் இன்று இந்திய ஊடக பிரதிநிதிகள் மத்தியில் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்திய மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குல்களை ஆஸ்ட்ரேலிய அரசு மிகத்தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக கூறினார்.
ஆஸ்ட்ரேலியாவில் உள்ள ஒவ்வொரு அயல்நாட்டு மாணவரின் நலனில் தமது அரசு அக்கறை கொண்டுள்ளதாகவும், அவர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கெவின் தெரிவித்தார்.
அதே சமயம் சர்வதேச குற்ற விவர பட்டியலை ஒப்பிட்டு பார்த்தால் அமெரிக்கா , பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளைவிட உலகிலேயே ஆஸ்ட்ரேலியாதான் மிகவும் பாதுகாப்பான நாடு என்பது தெரியவரும்.
மற்ற நாடுகளைக் காட்டிலும் ஆஸ்ட்ரேலியாவில்தான் இந்திய மற்றும் சர்வதேச மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த காலங்களில் இந்தியாவில் மட்டும் 20 முறை ஆஸ்ட்ரேலியர்கள் தாக்கப்பட்டோ , கொலை செய்யப்பட்டோ அல்லது கற்பழிக்கப்பட்டோ இருப்பதாக கெவின் சுட்டிக்காட்டினார்.