புதுடெல்லி : ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்படும் இனவெறி தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாஹ், இத்தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்ட்ரேலியாவில் உள்ள இந்திய மாணவர்கள் சிலருக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்த செய்திகளை அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.
தமது தொண்டு அமைப்பான 'ஸ்டீவ் வாஹ் அறக்கட்டளை' சார்பில் இன்று விடுத்துள்ள அறிககையில் இதனைக் கூறியுள்ள அவர், இந்தியா மற்றும் ஆஸ்ட்ரேலியா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள இளைஞர்க்ளுடன் தாம் பல ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளதாகவும், இரு நாடுகளிலுமே அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நல்லவிதமாகவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆஸ்ட்ரேலியாவில் உள்ள அன்னிய நாட்டு இளைஞர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள ஸ்டீவ் வாஹ் கிரிக்கெட், விளையாட்டு மற்றும் வர்த்தகம் மூலம் தமது நாடு எப்போதுமே நல்லுறவை பேணி வந்துள்ளதாகவும், ஆனால் தற்போது ஆஸ்ட்ரேலியாவிலுள்ள அன்னிய நாட்டு இளைஞர்கள் தாக்கப்படுவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளதாகவும், இந்த துரதிர்ஷ்டவசமான தொடர் நிகழ்வுகளை தடுத்து நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அதில் கூறியுள்ளார்.