புலிகளின் தலைவர்கள் வஞ்சகமாக கொல்லப்பட்டனர்: பத்மநாதன்

செவ்வாய், 19 மே 2009 (20:20 IST)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார் என்று கூறியுள்ள புலிகள் இயக்கத்தின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளர் பத்மநாதன், வெள்ளைக் கொடிகளுடன் பேச வந்த நடேசனையும், புலித்தேவனையும் சிறிலங்க இராணுவத்தினர் வஞ்சமாகக் கொன்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.

இலங்கையில் போர் நடந்த பாதுகாப்பு வலயப் பகுதியில் நடந்தது என்ன என்பது பற்றியும், பிரபாகரன் தொடர்பான வதந்திகள் குறித்தும் விளக்கமளித்துள்ள விடுதலைப் புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வென்றுவிட்டதைக் கொண்டாடுவதற்காக பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக ஒரு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனும், பாதுகாப்பாகவும் உள்ளார் என்பதை போரின் இறுதிகட்டத்தை துயரத்துடன் கவனித்துக் கொண்டிருக்கும் உலகத் தமிழ் சமுதாயத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களின் விடுதலையையும் கண்ணியத்தையும் பெறுவதற்குப் போராடும் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து அவர் தலைமையேற்று வழி நடத்துவார்” என்று பத்மநாதன் கூறியுள்ளார்.

“வெற்றி விழா கொண்டாட வேண்டிய அவசியத்தில் உள்ள சிறிலங்க அதிபரும், அரசும், விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற ஒரு கதையை உருவாக்கி தருமாறு தங்கள் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். அவர்களின் இந்தப் பிரச்சாரத்தை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம். இறுதிப் போரில் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட கட்டுப்பாடு காத்து செய்திடுமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நீதியில் பிறந்தது. 24 மணி நேர நிகழ்வுகளில் அதனை அழித்துவிட முடியாது. உண்மையும் நியாயமுமே இறுதியில் வெல்லும்” என்று பத்மநாதன் கூறியுள்ளார்.

வஞ்சமாக கொல்லப்பட்ட நடேசன், புலித்தேவன்

இலங்கையில் பாதுகாப்பு வலயப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதாகக் கூறியுள்ள பத்மநாபன், அதற்கென்று ஒரு தனித்த அறிக்கை அளித்துள்ளார்.

“மூன்றாவது நாடுகள் அளித்த கனரக ஆயுதங்களைக் கொண்டு சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதலில் எமது மக்கள் படுகொலை செய்யப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், ‘துப்பாக்கிச் சத்தத்த’ நிறுத்துவது என்று விடுதலைப் புலிகள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து போரை நிறுத்துவது தொடர்பாக சிறிலங்க இராணுவத்துடன் நேரடியாக விவாதிக்க ஏற்பாடு செய்துள்ளதாக சர்வதேச சமூகத்தின் சில உறுப்பு நாடுகள் எங்களிடம் கூறின.

போர் நடக்கும் பகுதியில் சிறிலங்க இராணுவத்தின் 58வது படைப் பிரிவினருடன் தொடர்கொள்ளுமாறும், ஆயுதங்கள் ஏதுமின்றி, வெள்ளைக் கொடியேந்தி அவர்களை அணுகுமாறும் பணிக்கப்பட்டோம். அதற்கிணங்க 58வது படைப்பிரிவின் அலுவலர்கள் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, நிராயுதபாணியாக, வெள்ளைக் கொடியேந்தி பா. நடேசனும், புலித்தேவனும் அவர்களை நோக்கிச் சென்றபோது, அவர்கள் இருவரையும் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது மானுடத்திற்கு எதிரான குற்றம் என்பதை சர்வதேச சமூகம் உணர்த்திட வேண்டும். தங்களிடம் சிறைப்பட்டிருந்த சிறிலங்க இராணுவத்தின் 7 போர்க் கைதிகளை நல்லெண்ண நடவடிக்கையாக விடுவித்தப் பிறகு, நிராயுதபாணியாகச் சென்றவர்களைச் சுட்டக் கொன்றது சிறிலங்க இராணுவம்.

இன்றுள்ள நிலையில், சிறிலங்க இராணுவத்தின் முகாம்களில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களின் நலனையும், பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம். இதற்கு மேலும் தமிழர்கள் மீது போர் குற்றங்கள் இழைக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும், அவர்களின் அரசியல் அபிலாசைகளை நிறுவேற்றும் பொறுப்பை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்கின்றோம்” என்று பத்மநாதன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்