ஆஸ்ட்ரேலிய காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 170-ஐ தாண்டியது
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (11:32 IST)
கடந்த ஒரு வாரகாலமாக தென் கிழக்குக் ஆஸ்ட்ரேலியாவில் பற்றிய காட்டுத்தீ ஏற்படுத்திய வரலாறு காணாத சேதத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 170-ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த காட்டுத்தீ 60 மைல் வேகக் காற்றினால் உக்கிரம் பெற்று வரலாறு காணாத வெப்பத்தையும் வறட்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
எரியூட்டல் நடவடிக்கைகள் மூலம் சுமார் 400 தீ மூண்டதாக காவல்துறையினர் சந்தேகிப்பதால், அதனை குற்றச் செயல் என்று ஆஸ்ட்ரேலிய அரசு அறிவித்துள்ளது. இதனைச் செய்தவர்கள் கொலைகாரர்கள் என்று ஏற்கனவே ஆஸ்ட்ரேலிய பிரதமர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் நகருக்கு அருகில் பரவிய தீயிற்கு 750 வீடுகள் தீக்கிரையாகின. சுமார் 5,000 பேர் வீடிழந்துள்ளனர். சுமார் 2,850 சதுர கிலோமீட்டர் பரப்பளவு எரிந்து சாம்பலாயின.
விக்டோரியா மாகாணத்தின் சில பகுதிகளில் இன்றும் கூட தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வார இறுதியில் வெப்ப நிலை அதிகரிக்கலாம் என்று அந்த நாட்டு வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.