விஞ்ஞானி ஏ.கியூ.கான் விடுதலை சரியானதுதான்: பாகிஸ்தான்
சனி, 7 பிப்ரவரி 2009 (18:08 IST)
பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் விடுதலை செய்யப்பட்டது சரியான முடிவுதான் என்று அந்நாட்டின் அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி நியாயப்படுத்தியுள்ளார்.
ஈரான், லிபியா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு அணு சக்தி தொழில்நுட்பத்தை ரகசியமாக விற்பனை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாற்றின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கானை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் குற்றமற்றவர் எனக் கூறி நேற்று விடுதலை செய்தது.
இதன் காரணமாக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏ.கியூ.கான் விடுதலை செய்தது பற்றி அமெரிக்கா வெளிப்படையாக கவலை தெரிவித்தது பிரச்சனையின் தீவிரவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துவிட்டது.
இந்நிலையில், விஞ்ஞானி ஏ.கியூ.கான் விடுதலை செய்யப்பட்டது நியாயமானதுதான் என டான் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியில் பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார்.
அணு சக்தி தொழில்நுட்பத்தை ரகசியமாக விற்பனை செய்வதற்காக அவர் உருவாக்கி வைத்திருந்த தொடர்புகளை அதிகாரிகள் முறியடித்து விட்டார்கள். எனவே அவரால் எதிர்காலத்தில் எந்தப் பிரச்சனையும் வராது என அமைச்சர் குரேஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.