ஐக்கிய அரபு குடியரசில் 50% கட்டுமானப் பணிகள் நிறுத்தம் : பெருமளவில் வேலையிழப்பு அபாயம்
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (15:49 IST)
பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக, ஐக்கிய அரபு குடியரசில் நடந்து வரும் 1,289 கட்டுமானத் திட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு லட்சக்கணக்கான அயல்நாட்டுத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரபுக் குடியரசின் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவின் காரணமாக கட்டுமானத் தொழில்துறை நிலைகுலைந்துள்ளது. இதனால், 582 பில்லியன் டாலர் மதிப்பிலான, ஐக்கிய அரபுக் குடியரசின் 53 விழுக்காடு வளர்ச்சிப் பணிகள் நிறுத்தி வைக்கப்ட்டுள்ளன.
இதுதொடர்பாக துபாயைச் சேர்ந்த சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், மொத்தம் 1.3 டிரில்லியன் டாலர் மதிப்புடைய ஐக்கிய அரபுக் குடியரசின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில்துறையில் தற்போது 698 பில்லியன் டாலர் மதிப்பிலான பணிகள் மட்டுமே நடந்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
அடிப்படைக் கட்டமைப்புத் துறைகள், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், கட்டுமானத் துறைதான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்த ஆய்வு தெரிவிப்பதாக அராபியன் பிசினஸ் இதழ் தெரிவிக்கிறது.
ஐக்கிய அரபுக் குடியரசின் வளர்ச்சிப் பணிகளில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் மட்டும் 74 விழுக்காடு பங்கை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், ஐக்கிய அரபு நாடுகளில் கட்டுமானப் பணிகளுக்காகச் சென்றுள்ள இந்தியா உள்பட பல்வேறு அயல்நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.