புலிகளுடன் பேச்சு: கொடை நாடுகள் கோரிக்கையை நிராகரித்தது சிறிலங்க அரசு
வியாழன், 5 பிப்ரவரி 2009 (15:40 IST)
போரை நிறுத்தி விட்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்ற கொடை நாடுகளின் கோரிக்கையை சிறிலங்க அரசு நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சிறிலங்க அரசின் பாதுகாப்புத் துறை செயலரும், ராஜபகசவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்ச, வன்னி பகுதியில் புலிகள் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ள ஐ.நா அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கொடை நாடுகள் மறந்து விட்டன.
அவர்களை மீட்பதற்காக சிறிலங்க அரசு மேற்கொண்ட பல முயற்சிகளை புலிகள் முறியடித்துள்ளன. தற்போது போரை நிறுத்தி விட்டு புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று கொடை நாடுகள் கூறியுள்ளது வன்னிப் பகுதியில் எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளை காப்பதற்கான நடவடிக்கை எனத் தெளிவாகத் தெரிகிறது.
போர் நடக்கும் பகுதியில் சிக்கிக் காயமடைந்துள்ளவர்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற உதவும் வகையில் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சிறிலங்க அரசின் நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்படும் என்றும் கோத்தபய கூறியுள்ளார்.
இலங்கைக்கு நிதியுதவி செய்து வரும் நாடுகளான அமெரிக்கா, நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள், போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தன.
அதே தருணத்தில் போர் நடக்கும் பகுதிகளில் சிக்கி காயமடைந்தவர்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல ஏதுவாக குறிப்பிட்ட காலத்திற்கு சிறிலங்க அரசு போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.