காஸ்ட்ரோ பிறந்த இடத்தை தேசிய சின்னமாக அறிவித்தது கியூபா
புதன், 4 பிப்ரவரி 2009 (18:23 IST)
கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் அவரது தம்பியும், தற்போதைய அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ ஆகியோர் பிறந்த இடத்தை தேசியச் சின்னமாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஹவானாவில் செய்தியாளர்களிடம் பேசிய கியூபா தேசிய சின்னங்களுக்கான குழுவைச் சேர்ந்த ஃப்ரேயா மடோஸ், ஹோல்க்வின் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரன் கிராமத்திற்கு (காஸ்ட்ரோ பிறந்த இடம்) உட்பட்ட 32 ஏக்கர் பகுதி, அதிலுள்ள 11 கட்டிடங்கள் ஆகியவற்றை தேசியச் சின்னமாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்றார்.
கடந்த பல ஆண்டுகளாக அருங்காட்சியகமாக செயல்பட்டு வரும் அப்பகுதியை தேசியச் சின்னமாக மாற்றியது ஏன்? என்பது பற்றி மடோஸ் விளக்கவில்லை.
காஸ்ட்ரோ சகோதரர்களின் பெற்றோர் ஏஞ்சல் காஸ்ட்ரோ- லினா ருய்ஸ் ஆகியோரது கல்லறைகளும் பிரன் கிராமத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.